{[['']]}
தமிழீழ தேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும்பொருட்டு, முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மாவீரர்களை விதைத்த துயிலுமில்லமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முதன்முறையாக இந்த வருடம் இடம்பெறவுள்ளன.
பிரதேச மக்கள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் இளைஞர்களின் முன்னெடுப்பில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி அரசியல் கட்சிகளில் தலையீடுகள் இன்றி உறவுகளின் உணர்வுபூர்வ நிகழ்வாக இடம்பெறும் இந்நிகழ்வில் அனைவரையும் அஞ்சலி செலுத்த ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
புதுக்குடியிருப்பிலிருந்து மாத்தளன் செல்லும் வீதியில் சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இரணைப்பாலை கிராமத்தில் உள்ள 25 ஏக்கர் என அழைக்கப்படும் பகுதியில், இறுதி யுத்த காலப்பகுதியான 2008ஆம் ஆண்டு பெண் மாவீரர் ஒருவரது வித்துடல் விதைக்கப்பட்டதோடு இந்த துயிலுமில்லம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த துயிலுமில்லத்தில் 500 வரையான மாவீரர்களின் நினைவுக்கற்கள் மற்றும் வித்துடல்கள் விதைக்கப்பட்டு அன்றிலிருந்து தொடர்ச்சியாக வருடாவருடம் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்று 2008 ஆம் ஆண்டில் இறுதியாக மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டது.
இறுதியாக 2008 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வோடு யுத்த சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீள்குடியேறியபோதும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் இவ்வாண்டு மக்கள் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment