Latest Movie :
Recent Movies
Showing posts with label Article. Show all posts
Showing posts with label Article. Show all posts

உலக மகளிர் தினம் : வீட்டைக்காக்கும் வல்லமை கொண்ட தொட்டிலை ஆட்டும் கைகள்

ஒரு பெண் சரியாக இருந்தால் வீடும் சரியாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. பெண் சரியாக இருப்பது என்றால் என்ன? வாழ்க்கை என்ற தேரை சரியான பாதையில் செலுத்துபவள் பெண்தான். வீடு தூய்மையாக இருக்கவேண்டும். வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். மிதமான செலவுகளால் அன்றாட வீட்டு நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ளவேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே ஒரு பெண் குடும்பத்தை வழிநடத்தி செல்லமுடியும். பெண்கள் வேலைக்கு சென்றால் அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறிவிடும். வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என்ற வேறுபாடு உண்டாகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகம், வீடு என 2 பொறுப்புகளையும் கவனிக்கவேண்டிய கட்டாயம் எற்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களின் வேலை எளிய வேலையாக கருதப்படுகிறது. வேறு எந்த தொந்தரவும் இல்லை. உரிய சம்பளமும் இல்லை. சம்பளம் மற்றும் பிரதி பலனும் அவசியம் இல்லாதது. காலகாலமாக பெண்கள் வீட்டு வேலைகளை தங்கள் கடமை என்று எந்த கைமாறையும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார்கள். வீட்டு வேலைகள்ஒவ்வொரு வேலைக்கும் அட்டவணை தயாரித்து கொள்ளுங்கள். காலை 9 மணிக்கு விட்டில் உள்ள அனைவரையும் அனுப்பிய பின்னர் ஓய்வு. 

காலையில் எழுந்து சப்பாத்தி மாவு தயார் செய்ய தாமதமாகும் அது போன்ற சமயங்களில் முந்தைய நாள் இரவே மாவை தயார் செய்து கொள்ளவேண்டும். காலை 6 மணி முதல் 9 மணிவரை குடும்ப தலைவிகளுக்கு மிக முக்கியமான நேரமாகும். இடுப்பு நொடிந்து வேலை பார்க்கிறாள் என்று சொல்வார்களே இந்த நேரத்தில் தான் பெண் கடினமாக வீட்டில் உள்ளவர்களுக்காக உழைக்கிறாள். ஓவியம் வரைவது, நடனம், சங்கீதம், விளையாட்டு, படிப்பது போன்ற மனதை உற்சாகமாக வைத்திருக்கும் நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டின் வளாகத்தில் அமைத்திருக்கும் தோட்டம் வீட்டின் அழகை வெளிச்சம் போட்டு காட்டும். தோட்டத்தில் பலவித பூச்செடிகளை உருவாக்குவது, அதில் களை எடுப்பது, செடிகளுக்கு தண்ணீர் போன்றவை நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் நிலம் இல்லை என்றாலும், அல்லது நீங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தாலும் சிலரது வீட்டின் வாசல் முன்பு காலியிடம் இருக்கும். அதில் பூச்செடிகளை வளர்க்கலாம். நீங்கள் வாடகை வீட்டில் வசித்தாலும். அடுத்தவர்கள் வீட்டில் எதற்கு நாம் பூச்செடி வளர்க்கவேண்டும் என்று எண்ண வேண்டாம். பூந்தோட்டமாகட்டும், செடி கொடிகளாகட்டும். அது எதுவாக இருந்தாலும் இயற்கை சம்மந்தப்பட்டது. இயற்கையை வளர்ப்பதில் அதிருப்தி கொள்ளவேண்டாம். அது மனதுக்கும் உற்சாகத்தையும், நிம்மதியையும் தரும்.

வீட்டின் முன்னால் உள்ள அலங்கார பொருட்களை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யுங்கள். சோபா செட்டை ஒரே திசையில் வைத்து இருக்க வேண்டும் அவசியம் இல்லை. ஒரே திசையில் இருந்தால் உங்களுக்கே போரடிக்கும். டி.வி. இருக்கும் இடத்தையும் வாரத்திற்கு ஒருமுறை மாற்றி அமையுங்கள் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். சிக்கனமான செலவு குடும்ப தலைவிகளுக்கு அவசியம். ஆண்கள் வீட்டிற்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்பார்கள். அதை வாங்கவேண்டாம் என்று கணவனுக்கு ஆலோசனை வழங்கலாம். தேவையில்லாத செலவு பெண்களின் கையில் பணம்  இருக்கும் போது அளவுக்கு அதிகமான காய் கறிகளை வாங்கி குவிப்பார்கள். அல்லது சேலை வாங்கி பீரோவில் அடுக்கிவைத்து அழகு பார்ப்பார்கள். அது அந்த மாதம் முழுவதும் வரும் வருமானம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் இருக்காது.  வீட்டில் வாங்கிவைக்கும் காய்கறிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அதை பயன்படுத்தா விட்டால் அழுகி போய்விடும் அல்லவா? பிரிட்ஜில் வைத்தாலும் ருசி இருக்காது. அதனால் நீங்களே பையை எடுத்துக்கொண்டு மார்க்கெட் செல்லுங்கள். கணவனிடம் செலவுக்கு வாங்கிய பணத்தில் ஒரு பகுதியை சேமித்த வங்கியின் சேமிப்பு கணக்கில் கட்டி வாருங்கள். வீட்டிற்கு தேவையானது என்றால் அதை கணவரிடம் சொல்லாமல் செய்வதில் தவறில்லை. 

ஏனென்றால் நீங்கள் பணம் சேமித்த விஷயம் கணவருக்கு தெரிந்தால் அதை அவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான செலவுகளுக்கு பயன்படுத்த கூடும். இதனால் அவசர காலத்துக்கு என்று சேமித்த பணம் உதவாமலே போய்விடும். தேவையில்லாமல் நகை, சேலைகளை வாங்க கூடாது என்று குடும்ப தலைவிகளுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. வீட்டில் சுப காரியம் நடக்கும்போது மட்டுமே விலை உயர்ந்த சேலைகளை பயன்படுத்த முடியும். இதனால் சேலைகளை வாங்குவது என்பது தேவையில்லாத செலவாகி விடும். உண்மையை சொல்லவேண்டும் என்றால் தொட்டிலை ஆட்டும் கைகள்தான் முழு வீட்டை காக்கும் சக்தி கொண்டவை. இந்த நாட்டையும் வல்லரசாக்கும் வல்லமை கொண்ட முழு சக்தியும் பெண்களிடம் தான் உள்ளது. அரை மணி நேரம் அவள் ஓய்வெடுத்தால். தொட்டிலும் நின்று விடும். வீடும் ஸ்தம்பித்துவிடும். அது எப்போது என்றால் அவள் ஒன்றிரண்டு நாட்கள் உடல்நிலை குறைவாக படுத்து இருக்கும்போதுதான் நமக்கு பெண்ணின் சக்தி என்ன? வீட்டை நிர்வகித்த திறமை என்ன என்பது நம் உள்ளத்துக்கு புலப்படும். குடும்ப தலைவிகளுக்கு வீடே கோவிலாக இருக்க வேண்டும். 

அழகுக்கு தேவை நகையல்ல...

உறவு பாதிக்கும் நகை விஷயத்திலும் உங்கள் குடும்பத்தின் நிலை அறிந்தே நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்றால் அது உங்கள் நன்னடத்தையால் மட்டுமே முடியும். அதற்கு உடைகளும், நகைகளும் தேவையில்லை. மனமும், நன்னடத்தை மட்டுமே முக்கிய அழகாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. வீட்டிற்கு நல்லது என்று நினைக்கும் எந்த காரியத்தையும் அதனை தைரியமாக செய்யுங்கள். சில விஷயங்களை கணவரிடம் தெரிவிக்க வேண்டியிருக்கும். அதில் ரகசியம் வைக்காதீர்கள். யாராவது உங்கள் கணவரை பற்றி தவறாக கூறினால் அதனை கேட்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதனால் உங்களது கணவருடன் உள்ள உறவும் பாதிக்கப்படும், மனமும் புண்படும். புகார் கூறுபவர்கள் கூறிக்கொண்டேதான் இருப்பார்கள் என்று அமைதியாக இருந்துவிட்டால் தொந்தரவு இல்லை.

{[['']]}

தமிழீழத்தின் துப்பாக்கி தூக்கா புரட்சிப் போராளி பாலசிங்கம்!

1938 மார்ச் 4ந்தேதி யாழ்ப்பாண நகரின் அடுத்த பரவெட்டியில் பிறந்தவர். படித்து முடித்தவுடன் இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். பணியாற்றும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டார். 5 ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் பாலசிங்கத்தின் மனைவி இறந்து போனதால் நொறுங்கி போய்விட்டார். 

மாற நினைத்து லண்டனிலுள்ள சவுத்பாங் பல்கலைகழகத்தில் அரசியல் - விஞ்ஞானம் பற்றி ஆய்வு செய்து வந்தார். டாக்டர் பட்டத்திற்காக இந்த பல்கலைகழகத்தில் பகுதிநேர பகல்கலை கழக மேற்பார்வையாளராக பணிபுரிந்து தன் பண தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டார். இப்பல்கலைகழகம் தான் பாலசிங்கத்துக்கு புது வாழ்க்கைக்குள்ளும், புரட்சிகர வாழ்க்கைக்குள்ளும் தள்ளியது.


ஆய்வு படிப்பு மாணவராகயிருந்த பாலசிங்கத்தை அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ (நர்ஸ்) படிப்பில் சேர்த்தார் அடேல். 1950 ஜனவரி 30ல் ஆஸ்திரேலியாவின் வரகல் நகரில் பிறந்தவர். 1978களில் சவுத்பாங் பல்கலைக்கழகத்தில் நர்ஸ்க்கான மேற்படிப்பில் சேர்ந்திருந்தார். அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் அதிகமானோர் இடதுசாரிகளாகவும், இடதுசாரி அரசியல் கருத்தை உடையவர்களாகவும் இருந்தார்கள். மார்க்சியம் - லெனினியம் பேசிய பாலசிங்கம் அவர்களோடு ஒன்றிணைந்து கருத்து பரிமாற்றத்தில் இருந்தார். 

அதே கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்த அடேல் அடிக்கடி பாலாவை சந்திக்கச் செய்தார். இருவரின் எண்ண அலையும் ஒத்துபோனது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், இன விடுதலைக்காகவும் போராடிய ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ், ஜிம்பாபாவே ஆப்ரிக்க தேசிய ஒன்றியம், தென்மேற்கு ஆப்ரிக்க மக்கள் அமைப்பு, பாலஸ்தீன விடுதலை அமைப்புகளின் போராட்ட, பேரணி பொதுக்கூட்டங்களில் பாலசிங்கம் – அடேல் கலந்து கொண்டனர்.

இவர்கள் வாழ்க்கையில் ஒன்றிணையலாம் என முடிவுசெய்து 1978 செப்டம்பர் 1ந்தேதி லண்டனிலுள்ள பிரிக்ஸ்டன் நகரத்தின் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் 5 நிமிடத்தில் திருமண சடங்கை முடித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் சிலர் செய்த பண உதவியை கொண்டு திருமணத்திற்கான “பீர் பார்ட்டி” தந்தது பாலசிங்கம் – அடேல் தம்பதி.

திருமணத்திற்கு பின்னும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் தம்பதிகளாக கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக பேரணி நடத்தியது. அணு ஆயுத ஒழிப்பு இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தனர். அதே காலகட்டத்தில் 1977ல் இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் இருந்து தமிழர் பிரதேசங்களில் வன்முறை அதிகமானது. 

அது லண்டனில் வாழ்ந்த தமிழ் இளைஞர்களைத் தட்டி எழுப்பியது. தமிழ் அரசியல் அமைப்புகள் உருவாயின. பல்கலைகழத்திலிருந்த பாலசிங்கத்தை லண்டனிலிருந்த இலங்கை தமிழ் இளைஞனான ஞானசேகரன் சந்தித்து மக்களுக்கு அரசியல் ஆவணம் ஒன்றைத் தயாரித்து தருமாறு வேண்டினார். அதன்படி பாலாவும் தயாரித்து தந்தது லண்டன் தமிழ் மக்களிடையே பெரிய வரவேற்ப்பைப் பெற்றது. அந்த ஆவணம்தான் பாலா தம்பதி வாழ்வை மாற்றியது.

அந்த ஆவணத்தை படித்த விடுதலை புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ லண்டன் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் பாலாவை சந்திக்க ஆரம்பித்தார்கள். விடுதலைப்புலிகள் பற்றியும், அதன் தலைவர் பிரபாகரன் செயல்பாடுகள் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் உன்னிப்பாக கேட்டுக்கொண்டார் பாலா. 

விடுதலைப்புலிகளின் லண்டன் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டதற்காக தமிழ் தேசிய பிரச்சனை, சோசலிச தமிழீழத்தை நோக்கி... என இரண்டு தலைப்புகளில் நூல்களை எழுதித்தந்தார். அது பிரபாகரனை மிகவும் கவர்ந்தது. அதன்பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மாற ஆரம்பித்தார்.


1979ல் பிரபாவை முதன்முதலாக காண பாலா-அடேல் தம்பதி லண்டனிலிருந்து சென்னை வந்தபோது அமைப்பின் ரகசிய தலைவர்கள், அமைப்பின் ரகசியங்கள், மேல்நாட்டு ரகசிய தொடர்புகள் அறிந்தவராக இருந்தார். பின் கள தளபதிகள், அமைப்பின் பூசல்கள், அதிகார போட்டிகள் போன்றவற்றைக் கண்டு ஆலோசனை தருபவராக, முடிவு எடுப்பவராக இருந்தார். 

1983ல் இந்தியாவின் பார்வை, பயிற்சிகள் விடுதலைப்புலிகளுக்கு கிடைக்க வழி அமைத்து தந்தவர்களுள் முக்கியமானவர். புலி போராளிகளுக்கு, கள தளபதிகளுக்கு அரசியல் பயிற்சி தந்து வளர்த்தவர். அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர அடித்தளமிட்டதன் மூலம் சிறந்த திட்டமிட்டாளர்  என்பதை நிரூபித்தார்
இந்தியா-புலிகள் பேச்சுவார்த்தைகள், இலங்கை அரசு-புலிகள் பேச்சுவார்த்தை, அமைதி ஒப்பந்தம், அமைதி கால பேச்சு வார்த்தைகளில்தான் ஒரு இராஜதந்திரி என்பதை நிரூபித்தார். எவ்வளவு பெரிய தலைவர்களிடம் பேசும்போதும் நிதானம் தவறாமல், கோபப்படாமல் தன் தரப்பின் நியாயத்தை எடுத்து வைத்து தன் தரப்பை விட்டுக் கொடுக்காமல் சாதித்தவர். அதனாலேயே இயக்க தலைமை அவரை சர்வதேச பேச்சுவார்த்தை தலைவராகவே வைத்திருந்தது.

சீட்டாட்ட பிரியரான பாலசிங்கம் சீட்டு கலைத்த பின் அந்த சீட்டு மாறி மாறி போவதைப் போல இந்தியா புலிகள் மோதலின் போது வடமராட்சி, கரவெட்டி, யாழ்ப்பாணம், முல்லை, நெல்லியடி என தன் மனைவி அடேலோடு வீடுகள் மாறி மாறி பதுங்கினார். காரணம் இந்திய அமைதிப்படை பாலா தம்பதியை வலைவீசி தேடியது. பாலாவுக்கு இரவில் கண்பார்வை மங்கல்; இதனால் மிகவும் சிரமப்பட்டார். ராணுவ தேடுதலின் போது இரவில் பயணமாகும்போது அடேல் தான் துணையே. இந்தியாவின் அமைதிப்படை விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது இயக்கத்தில் ஏகப்பட்ட உயிரிழப்பு. அப்படியும் அடேல், பாலா தம்பதிக்கு பாதுகாப்புக்கு சுக்ளா என்ற போராளி நிரந்தரமாக கூடவேயிருந்தார். அதேபோல் காயம்பட்ட பொட்டம்மன், நடேசன் ஆகியோர் மாறி மாறி துணைக்கு இருந்தார்கள்.

1987 டிசம்பர் 23ல் தமிழக முதல்வாகயிருந்த எம்.ஜி.ஆர் மறைந்தார். அதனால் இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட புலிகள் பாலா தம்பதியை படகு மூலம் தமிழகம் அனுப்பினார்கள். 10 மணிநேர கடல் பயணத்திற்கு பின் வேதாரண்யம் வந்தவர்கள், ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்தனர். 

தமிழகத்தில் அப்போது புலிவேட்டை தொடர்ந்ததால் அந்த தலைமறைவு நிலை. வேதாரண்யத்திலிருந்து திருச்சி வந்து தங்கியவர்கள் அங்கிருந்து பெங்களூர் ஜெயநகரில் வாடகை வீடு பிடித்து தங்கினர். தமிழகத்திலிருந்த இயக்க முன்னோடிகள் சிலர் பெங்களூர் போய்விட்டனர்.

சில நாட்களில் பிரபாவிடமிருந்து தகவல் உடனே லண்டன் பயணமாகுங்கள் என்று அப்போது விசா காலாவதியாகியிருந்தது. அதனால் சென்னை பயணமானார்கள். அதோடு சென்னை விமான நிலையம் மூலமாகவே செல்ல முடியும் என்ற நிலை வேறு. சென்னை வந்தவர்கள் ஏற்கனவே அறிமுகமான இந்திய புலனாய்வு துறையின் அதிகாரியொருவரின் உதவியை கேட்டார்.  

அதற்கு சரியென்றவர் தமிழக க்யூபிராஞ்ச் போலிஸாரின் கண்களில் படாமல் இருக்குமாறு எச்சரிக்கை செய்தார். அந்த நிலையிலும் எதிரியின் குண்டு வீச்சால் காலில் அடிபட்டு சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த கிட்டுவை தமிழக போலிஸார் வீட்டு காவலில் வைத்திருந்தார்கள். இரண்டு அடுக்கு மாடி வீட்டில் மேல் மாடியில் கிட்டுவும், கீழே போலிஸாரும் தங்கியிருந்தனர். இரவில் கம்பி வேலியை நீக்கிவிட்டு போய் பாலாவை சந்தித்து விட்டு அதேபோல் திரும்பியவர் பின் அந்த அதிகாரி உதவியுடன் லண்டனுக்கு பறந்தார்கள் பாலா-அடேல் தம்பதியினர்.
1989 மே 3ந்தேதி பிரமதேசா கட்சி காலத்தில் இலங்கைக்கு வருகை புரிந்தார்கள். அதன்பின் பேச்சுவார்த்தை, போர், அமைதி காலகட்டமென நடந்தபோது 1998 ஆகஸ்ட் மாதம் பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமானது, படுத்த படுக்கையானார். நாட்கள் செல்லச்செல்ல உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்தியாவிடம் உதவி கேட்டார்கள் ராஜிவ்காந்தி கொலையால் போடப்பட்ட தடையை சுட்டி காட்டினார்கள். 

பின் நார்வேயிடம் உதவி கேட்கலாம் என முடிவு செய்து இலங்கையின் முன்னால் வெளிவிவகார அமைச்சரான ஐ.சி.ஏஸ்.ஹமீதுவை அணுகினார்கள். அவர் தனக்கு நெருக்கமான இலங்கைக்கான நார்வே தூதர் ஜோன் ஆவஸ்போக்கிடம் கேட்டார்; அவரும் சம்மதித்தார். நார்வே தூதரான ஜோன் அப்போது அதிபராகயிருந்த சந்திரிகா குமரதுங்காவிடம் பேசினார். 

பாலசிங்கத்தின் உயிர் புலிகளுக்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த சந்திரிகா புலிகளுக்கு நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்தார். எல்லாமே ராணுவ நிபந்தனைகள் அதெல்லாம் முடியாது என ஒதுக்கியது புலிகள். அப்போது அனுமதியில்லயென்றார் சந்திரிகா. கவலையில்லையென என அறிவித்த புலி தலைமை உயிரோடு விளையாட தீர்மானித்தது. கடற்பயணம் அதுவும் ரகசிய பயணத்திற்கு திட்டம் போட்டார்கள்.

1999 ஜனவரி 23 நள்ளிரவி கடல் மார்க்கமான கடற்புலிகள் உதவியோடு படகு மூலம் அடேல்-பாலா தம்பதி ஏற்றப்பட்டார்கள். உடல்நிலை சரியில்லாத பாலா படுத்தபடியே வந்தார். அங்கிருந்த ஒரு சின்ன கப்பல் பின் நடுக்கடலில் சரக்கு கப்பலுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. புலிகளின் கப்பற்படை வீரர்கள் திறமையாக செயல்பட்டு பாதுகாப்பாக கப்பல் விட்டு கப்பல் மாற்றி அனுப்பி வைத்தார்கள். மோசமான உடல்நிலையோடு, மோசமான கடற்பயணம் பலநாள் தொடர்ந்து 1999 பிப்ரவரி மாதம் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் இறங்கினார்கள். 

அங்கு பாலாவுக்கு ரகசிய சிகிச்சை தரப்பட்டது. இடதுபுற சிறுநீரகம் வெட்டி எடுக்கப்பட்டது. உடல்நிலை தேறியது. பாலா, அடேல் விசா காலாவதியாகி ஆண்டுகள் உருண்டோடியிருந்து. பின் தெரிந்த மேல்மட்ட அதிகாரிகளிடம் பேசி விசா பெற்று லண்டன் போய் சேர்ந்தார்கள். உடல்நிலை தேறிய பின் நார்வேவுடன் சமாதான வார்த்தையில் ஈடுபட்ட அந்த அறிஞர் துப்பாக்கியே தூக்கா புரட்சி போராளி.

2006 டிசம்பர் 13ந்தேதி லண்டனில் காலமானார். குழந்தை செல்வம் இல்லாத பாலா தம்பதிக்கு. ஆனால் பாலா இறந்தபோது குழந்தையாய் மாறி தழீழமே கண்ணீர் விட்டது.
{[['']]}

சிரியாவில் கொப்புளிக்கும் இரத்த ஊற்று! #1

சிரியாவைப் பற்றி சமீபநாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அந்த நாட்டில் ஏதோ சில நாட்களாகத்தான் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுவதைப் போல பரிதாபப்படுகிறார்கள்.

அரபு உலகில் சிரியா மட்டுமல்ல, லெபனான், பாலஸ்தீனம், இராக், எகிப்து என்று எத்தனையோ நாடுகள் கடந்த காலங்களில் கொடூரமான படுகொலைகளைச் சந்தித்திருக்கின்றன.

அப்போதெல்லாம் பொங்காத மனிதாபிமானம் இப்போது ஊற்றெடுப்பதற்கு உலகளாவிய பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்வதற்கு முன் சிரியாவின் முன்கதையை கொஞ்சம் அறிந்துகொள்வது நல்லது.

கி.மு.10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிரியா நாகரிகத்தின் இருப்பிடமாக கருதப்பட்டிருக்கிறது.

ஆனால், நவீன சிரியா முதல் உலகப்போருக்கு பின்னரே உருப்பெற்றது. இன்றைய லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டானின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பெரிய நாடாக இருந்த சிரியா, முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் முடிவில் வல்லரசுகளால் கூறுபோடப்பட்டது.

முதல் உலகப்போர் சமயத்தில் ஒட்டாமன் பேரரசில் சிரியா இணைந்திருந்தது. போரின்போது ஒட்டாமன் மற்றும் அதன் கூட்டுப்படையினர் ஆர்மீனியின் இனப்படுகொலை, அஸ்ஸிரியன் இனப்படுகொலைகளை நடத்தினர். கொல்லப்பட்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர்.

போரின் முடிவில் ஒட்டாமன் பேரரசை இரண்டாக கூறுபோட்டனர். பிரான்சிடம் இருந்து 1936 ஆம் ஆண்டு விடுதலை பெற்று சிரியா குடியரசாகியது. ஆனால், பிரான்சும் சிரியாவும் ஏற்படுத்திய விடுதலை ஒப்பந்தத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏற்கவில்லை.

அதன்பிறகு இரண்டாம் உலகப்போர் முடிவில் 1946ல்தான் பிரான்ஸ் ராணுவம் சிரியாவிலிருந்து வெளியேறியது. அதற்கு முன்னதாக நாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடியரசின் கையில் ஒப்படைத்தது. குடியரசு ஆனபிறகு 1948 ஆம் ஆண்டு சிரியா படைகள் பாலஸ்தீனத்திற்குள் புகுந்து யூத குடியிருப்புகளை நொறுக்கியது. இஸ்ரேல் உருவாவதை தடுக்கவே இந்த போர் நடத்தப்பட்டது. ஆனால், போர் வெற்றிபெறவில்லை. இதையடுத்தே சிரியா அரசு ராணுவப்புரட்சியால் தூக்கியெறியப்பட்டது. அரபுநாடுகளில் நடைபெற்ற முதல் ராணுவப்புரட்சி என்று இதை கூறுகிறார்கள். ஆனால், அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து பல ராணுவப் புரட்சிகள் நடைபெற்றன. 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சிக்குப் பிறகு நாட்டின் நாடாளுமன்ற நடைமுறைகள் சீரமைக்கப்பட்டன.

அந்தச் சமயத்தில் எகிப்தில் அதிபராக நாசர் பதவியேற்றார். அதையடுத்து நாஸரிஸம் என்ற புதிய கோட்பாடு அரபுநாடுகளுக்கு அறிமுகமாகியது. 1956 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் பிரச்சனை உருவானபோது சிரியா அரசு சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டது. இது துருக்கி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. ஆனால், அதுபோல எதுவும் நிகழவில்லை.

இந்நிலையில்தான் 1958 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்றைய சிரியா ஜனாதிபதி சுக்ரி அல் குவாட்டிலும் எகிப்து அதிபர் நாஸரும் ஒரு உடன்பாடு செய்துகொண்டனர். அதன்படி, எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபு குடியரசை உருவாக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிரியாவில் உள்ள மற்ற கட்சிகளும், கம்யூனிஸ்ட்டுகளும் வெளிப்படையான நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டனர். சிரியா கம்யூனிஸ்ட் கட்சி என கருதப்படும் பாத் கட்சி நிர்வாகிகள் ஒரு ரகசிய ராணுவத்தை அமைத்தனர். அதன் தலைவர்களாக முகமது உம்ரன், சலாஹ் ஜாடிட், ஹஃபேஸ் அல் ஆஸாத் ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த ராணுவக்குழு நடத்திய திடீர் புரட்சியில் எகிப்து-சிரியா உடன்பாடு முறிந்தது. ஆனால், மீண்டும் சிரியாவில் ராணுவப்புரட்சிகளுக்கு வழி வகுத்தது. பாத்கட்சியின் ராணுவக்குழுவில் இடம்பெற்ற ஹஃபேஸ் தனது தோழரான ஸலாஹ் ஜாடிட்டை வெளியேற்றிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.

இவருடைய ஆட்சியில் ராணுவம் பலமிக்கதாக மாற்றப்பட்டது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் சண்டையில் ஈடுபட்டார். அவருக்கு எகிப்தும் உதவி செய்தது. இஸ்ரேலுடன் போர் பின்னர் லெபனானை நோக்கித் திரும்பியது.

1976 ஆம் ஆண்டு தொடங்கிய லெபனான் மீதான தாக்குதல் 30 ஆண்டுகள் நீடித்தது. ஜனாதிபதி அல் ஆஸாத் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி வளைகுடாப் போரில் இராக்கிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து சண்டையில் ஈடுபட்டார். 2000ம் ஆண்டு ஜனாதிபதி அல் ஹஃபேஸ் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய மகன் பஷர் அல் ஆஸாத் எதிர்ப்பே இல்லாமல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தனது தந்தையைப் போலில்லாமல் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து ரஷ்ய ஆதரவு நிலையையே மேற்கொண்டார். அந்த அளவுக்கு சிரியா மீதான எதிரிகளின் தாக்குதல் அதிகரித்தது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபிறகும் ரஷ்ய ஆதரவு நாடுகளை தனது பக்கம் இழுக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியில் முடிந்தது.

உள்நாட்டுக் கலகங்களையும், பக்கத்து நாடுகளின் நெருக்குதல்களையும் அமெரிக்கா தனது ஆயுதமாக பயன்படுத்தியது. ஆனாலும், சிரியா அரசு அனைத்து எதிர்ப்புகளையும் ராணுவரீதியாகவே சந்தித்தது. சிரியாவில் வடகொரியா தொழில்நுட்பத்துடன் அணுஉலை தொடங்கப்படுவதாகக் கூறி விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால், சிரியாவில் அதுபோல ஒரு அணுஉலை இருந்ததா என்பதை சர்வதேச அணுசக்தி கமிஷன் ஏஜென்சியால் நிரூபிக்க முடியவில்லை. இருந்தாலும், இன்றுவரை வடகொரியாவின் ஆயுதஉதவியை சிரியா பெறுவதாக தொடர்ந்து வதந்திகளைப் பரப்பப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு லெபனானில் இருந்து சிரியா வெளியேறியது. அதன்பிறகும் சிரியாவில் இஸ்லாமிய மதக்குழுக்களுக்குள் மோதல்கள் நீடித்தே வந்தன. அதாவது அரபு நாடுகளுக்கே உரிய அத்தனை லட்சணங்களுடன் சிரியாவும் பயணத்தை தொடர்ந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் தென்னமெரிக்க நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் பல்வேறு நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றத் தொடங்கினர். குறிப்பாக வெனிசூலாவில் இருந்து அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை ஜனாதிபதி சாவேஸ் வெளியேற்றினார்.

இதையடுத்து, இராக்கை கபளீகரம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு யுத்தத்தை தொடங்கியது. அங்கும் ஸன்னி, ஷியா பிரிவு முஸ்லிம்களின் மோதலை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது அமெரிக்கா.

எண்ணெய் ஊற்றுக்காக அரபு நாடுகளை ரத்தக்களறியாக்கும் அமெரிக்காவின் தொடர் முயற்சிகளை அடுத்த அத்தியாத்திலும் பார்க்கலாம்




{[['']]}

அதிகாரங்களின் போட்டிக்கு அறியா உயிர்கள் பலி - சிரியா போரும் பின்னணியும்!

'உங்களை எல்லாம் மேலே இருக்கும் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.  நான் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்.  கண்டிப்பாக உங்களை எல்லாம் தண்டிப்பார்' காதில் இரத்தம் வழிய, கண்ணீல் நீர் வழிய அப்பாவியாக கதறும் அந்தக் குழந்தைக்கு தெரியாது இந்தப் போர்களுக்கெல்லாம் மனிதன் படைத்த கடவுளும் ஒரு காரணம் என்று.

சிரியா உள்நாட்டுப்  போர் நடைபெறும் கிழக்கு கூட்டாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 500க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் கொன்று  குவிக்கப்பட்டுள்ளனர். கிளோரின் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த செய்தி தற்போது இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடையே பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

போர் என்றால் என்னவென்றே அறியாத பிஞ்சுகளின் உயிரை எடுத்து எதை சாதிக்கப் போகிறார்கள் என்று மனம் பதறுகிறது. பலருக்கு இந்த நாட்டில்  என்ன  நடைபெறுகிறது என்ற கேள்வி எழுகிறது. இதுவரை உள்நாட்டுப் போரால் 11 மில்லியன் மக்கள் வரை இறந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர், உள்நாட்டுப் போர்களில் அதிகமாக மக்களை இழந்துகொண்டு வரும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது சிரியா.

சிரியாவில் 1970ஆம் ஆண்டிலிருந்து ஹபிஸ் அல் அஸாத் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தார். இவரது ஆட்சியில் தான் சிரியா நவீனமானது. அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகன் பஷார் அல் அஸாத், கடந்த 2000ஆம் ஆண்டில் அதிபராகினார். ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரது அண்ணன் பஸ்ஸல் அல் அஸாத் விபத்தில் இறந்துவிட இவர் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். இவர் அதிபரான புதிதில் நம்பிக்கை அளிப்பது போன்றுதான் பேசினார், நடந்துகொண்டார். 



மக்களுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு புதிய சிரியா உருவாகும் என்று மக்களும் நம்பினர். ஆனால், சில ஆண்டுகளில் இவரது சர்வாதிகார தன்மை, பழைய பாணி ஆட்சி  அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, வறுமை, ஷியா-சன்னி பிரிவினை, வேறுபாடு என மக்கள் அவதிப்பட்டனர்.  2011ஆம் ஆண்டில் "அராப் ஸ்ப்ரிங்" என்று சொல்லப்பட்ட புரட்சி சிரியாவில் வெடித்தது.

அராப் ஸ்ப்ரிங், 2010 சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளான அரபு நாடுகளில் இருக்கும் மக்கள், அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களை வஞ்சிக்கும் அரசாங்கங்களை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிப் போக்கின் பெயர். எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்து மக்களுக்கு ஏற்றது போல அரசாங்கம் அமைய இருந்தது. லிபியாவிலும் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இதன் தாக்கத்தில் சிரியா மக்களும் தங்களுக்கான ஜனநாயக நாட்டை உருவாக்க நினைத்து களத்தில் இறங்கினர்.

2011 மார்ச் மாதம் அராப் ஸ்ப்ரிங் ஆதரவாகக் குரல் கொடுத்து சிரியாவில்  முதல் முறையாக  போராடிய பதினைந்து பேரை சிரியா அரசு சித்ரவதை செய்தது. இதில் பங்குகொண்ட 13 வயது சிறுவனை சித்ரவதை செய்து கொன்றது. பின்னர் சிரியா அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நாடு முழுவதும் பரவ ஆரம்பிக்க, போராட்டங்களில் ஈடுபடும் மக்களை வன்மையாக தண்டித்து கொன்று குவித்தது பஷாரின் அரசு. 

ஜூலை 2011 ஆம் ஆண்டில் ஆர்மியில் வேலை பார்த்து அரசாங்கத்திற்கு எதிராக மாறியவர்கள், சுதந்திர சிரியா ராணுவம்  ( ஃப்ரீ சிரியா ஆர்மி) என்ற பெயரில் போராட்டத்தில் குதித்தனர். கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தைப் பிடிக்க போராட்டத்தை நடத்தினர். போராட்டங்கள் எல்லாம் ஆயுதம் ஏந்திய போராட்டமாக தொடர்ந்தன. உள்நாட்டு கிளர்ச்சியை  வெளிநாடுகள்  புகுந்து கட்டப்பஞ்சாயத்து செய்து,  அதிகாரங்களுக்கு இடையிலான போராக பெரிதாக்கினர்.  



சிரியா நாட்டில் வாழும் மக்கள் பலர் சன்னி இசுலாமியர்களாகவே இருந்தனர். ஆனால் நாட்டை ஆள்பவர்களோ அல்வைத் மற்றும் ஷியா இசுலாமியர்களாக இருந்தனர். பஷார், அல்வைத் பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டில் புரட்சியாளர்கள் அலெப்போ மற்றும்  சிரியாவின் பிற முக்கிய நகரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தலைநகர் டமாஸ்கஸை பிடிக்க விரைந்து கொண்டிருந்தனர். இதில் நடந்த வன்முறையில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். 

முதலில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமான உள்நாட்டு போராக இருந்தது பின்னர் பல குழுக்களிடையான பிரச்சனையானது. சிரியா அரசாங்கத்திற்கு உதவியாக ஷியா பிரிவு மக்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளான இரான் மற்றும் இராக் நாடுகள், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹெஸ்பொல்லா கட்சி, மற்றும் ரஷ்யாவும் களமிறங்கின. அரசாங்கத்தை எதிர்பவர்களுக்கு உதவியாக அமெரிக்கா,  சன்னி பிரிவு இசுலாமியர்களை அதிகம்  கொண்டுள்ள நாடுகளான  சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் போன்ற நாடுகள் இறங்கின. இது போதாதென்று  தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா இயக்கங்களும்  உள்நாட்டுப் போரில் இயங்கிவருகின்றன. குர்தீஷ் என்னும் ஒரு பிரிவினரும் தனி நாடு கோரிப் போராடுகின்றனர்.

தீவிரவாத இயக்கங்கள் உள்ளே நுழைந்ததும் அதிகார வர்க்க நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் தடையின்றி  ஆயுதங்களை  கொடுத்து உதவுகின்றன. 'தீவிரவாதிகளை ஒழிக்க மட்டும் தான் ஆயுதம் தருகிறோம்' என்று அதற்கு நியாயமும் கற்பிக்கின்றன. இஸ்ரேலும் சிரியாவுக்கு உதவியாக இருக்கும் லெபனானின் ஹெஸ்பொல்லா கட்சியை குறிவைத்துத் தாக்கியது. அரசாங்கம் சேமித்து வைத்திருந்த முதல் உதவி, மருத்துவ சேவைகள் போன்றவற்றையும் விமான படைகள் மூலம் தாக்கியது. சமீபத்தில் இந்த மாத தொடக்கத்தில் (பிப்ரவரி 2018) சிரிய எல்லைக்குள் சுற்றி வந்த இஸ்ரேலிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அரசு படை. 2016ஆம் ஆண்டில் இருந்தே துருக்கி படை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவையும், வடக்கு சிரியா பகுதியில் எல்லை ஓரப் பகுதியை வைத்திருக்கும் குர்தீஷ் குழுவையும் பலமுறை தாக்கியிருக்கிறது. 

இந்த குர்தீஷ்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறது. ஜனவரி 2018 ஆம் ஆண்டில் குர்தீஷ் கைக்குள் வைத்திருக்கும் சிரிய வடக்கு எல்லையோர பகுதிகளை மீட்க துருக்கி, சுதந்திர சிரியா ராணுவம் மற்றும் சிரியா அரசாங்கம் மூன்றும்  தனித்தனியே முயன்று வருகின்றன. சிரிய அரசு, சுதந்திர சிரிய ராணுவம், ஐ.எஸ்.ஐ.எஸ்., குர்தீஷ் என நடக்கும் அதிகாரப் போட்டியில் எதுவும் அறியாத மக்கள் தொடர்ந்து பலியாகின்றனர்.


பிப்ரவரி 2018 ஆண்டு வரை 5.5 மில்லியன் சிரியா அகதிகள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள்தான் சிரியா நாட்டு அகதிகளுக்காக முகாம்கள் அமைத்திருக்கின்றனர். மேலும் சிலர் பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு கணக்கின்படி 60,000 அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு வந்துள்ளனர். சிரியாவின் மக்கள்தொகை இந்த போரினால் மிகவும் குறைந்துள்ளது, போர் முடிந்த பின்னர் இந்த நாட்டை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றே...

சமூக ஆர்வலர்கள் பலர் இந்தப் போருக்குக் காரணம் வேற்றுமை அல்ல வல்லரசு நாடுகளின் தேவை என்கின்றனர். சிரியாவில் சீற்றம் ஏற்படுத்தி எண்ணையை எடுக்க நினைக்கிறது ஒரு நாடு, இந்தப் போரினை நம்பி ஆயுதம் விற்கிறது ஒரு நாடு, தங்களின் பகையை தீர்த்துக்கொள்கின்றன சில நாடுகள். அதற்கு மனித மனதின் வேற்றுமைகள் கை கொடுத்துவிட்டன. 


ஒரு வீடியோவில், ஒரு குழந்தை 'உங்களை எல்லாம் மேலே இருக்கும் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.  நான் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்.  கண்டிப்பாக உங்களை எல்லாம் தண்டிப்பார்' என்று காதில் இரத்தம் வழிய, கண்ணீல் நீர் வழிய அப்பாவியாக கதறுவான். அந்தக் குழந்தைக்கு தெரியாது இந்தப் போர்களுக்கெல்லாம் மனிதன் படைத்த கடவுளும் ஒரு காரணம் என்று.
{[['']]}

ஒரு தலைமுறையை அழித்துவிட்ட சிரியா யுத்தம்!



சிரியா வரலாற்றில் அழியாச் சுவடுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு நிற்கிறது. மனித குலம் பார்த்திராதக் கொடூரங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன. கொத்துக் கொத்தாக கொல்லப்படும் உயிர்கள். உலகின் அழகிய நகரங்களைக் கொண்ட சிரியா, மெள்ள நரகமாக மாறி வருகிறது. பாதுகாக்க வேண்டிய அரசே பொது மக்களை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது.

அங்கே மனிதநேயம் முற்றிலும் மரணித்து போயிருக்கிறது. என்னதான் நடக்கிறது சிரியாவில்? இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது? இவையெல்லாம் நமக்கு தெரிய வேண்டுமென்றால் அதன் வரலாற்றை அறிய வேண்டும்.

மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்துக்கும் பரவியது. 

இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டார்கள்.ஆனால் லிபியாவில் சர்வாதிகாரியான கடாஃபி, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கொல்லப்பட்டார். அதன் பிறகு அரபு எழுச்சி மற்ற நாடுகளுக்கும் பரவியது. அதில் ஒன்றுதான் இந்தச் சிரியா.


அங்கு பதவியில் இருந்த பஷார் அல் அசாத்திற்கு எதிராக புரட்சி தொடங்கியது. மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு இன்னொரு காரணம் மதப் பிரிவினை.

சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் பெரும்பான்மை சன்னிக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளே ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 



தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தொடர்ந்தது. இதையடுத்து, பெரும்பான்மை சன்னி பிரிவினர் தொடங்கிய புரட்சி, பின்னர் ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது.

லிபியாவில் கடாஃபிக்கு ஏற்பட்ட நிலையை உணர்ந்த சீனாவும் ரஷ்யாவும் தங்களது வர்த்தகக் கூட்டாளியான பஷார் அல் ஆசாத்தை ஆதரித்தனர்.இந்த நேரத்தில் ஈராக்கில் இருந்து வந்த ஐ.எஸ். அமைப்பு, தனி நாடு கோரும் குர்துக்கள், ஆசாத்தைப் பிடிக்காத சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான் என பல தரப்பும் சிரியாவுக்குள் நுழைந்தன.

நான்கு முனை தாக்குதலாக நடக்கும் யுத்தத்தில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா, ஹிஸ்புல்லா இயக்கம், ஈரான் போன்றவை களம் இறங்கின. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி சண்டையிடுகிறது. அமெரிக்காவோ, குர்துக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் நிற்கிறது. இவர்கள் அனைவரையும் ஒழித்துவிடத் துடிக்கிறது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்.



உச்சத்தைத் தொட்ட சிரியா யுத்தம்

2011ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா யுத்தம், 2016-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டது. பழம்பெருமை கொண்ட நகரமான அலெப்போ 2016-ஆம் ஆண்டு மிகப்பெரிய போர்க்களமாக மாறியிருக்கிறது. 

2012-ஆம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரைக் கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் சின்னா பின்னமாகியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் இந்த நகரின் மக்கள்தொகை வெறும் மூன்று லட்சமாகக் குறைந்தது.

ரஷ்யப் படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை விட்டு விரட்டப்பட்டனர்.  இரு முக்கியப் பகுதிகளை சிரிய ராணுவம் கைப்பற்றியது. ஜூலை மாதத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், கிழக்கு அலெப்போ நகரில் சிக்கியிருந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் கொண்டு செல்லப் பயன்பட்ட சாலையை சிரிய ராணுவம் அடைத்தது. 


இதைத் தொடர்ந்து தாக்குதல் தீவிரமடைந்தது. ரஷ்ய விமானங்களும், சிரியாவின் ராணுவமும் வீசிய குண்டுகள் ஏராளமான கிளர்ச்சியாளர்களுடன் சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என யாரையும் இந்த யுத்தம் விட்டுவைக்கவில்லை.

கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும் பொதுமக்கள் வதைக்கப்பட்டனர். சித்திரவதை செய்வதற்கும் தனிமையில் அடைத்து வைப்பதற்கும் பல சிறைகளை கிளர்ச்சியாளர்கள் அமைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம்

அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்நகரில் வசித்து வந்த பலர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 5 வயது சிறுவன் ஒம்ரான் படுகாயமடைந்து முகத்தில் ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் படம் உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது.


இதனிடையே சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதல் காரணமாக, சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களும், உணவுப் பொருட்களும் எளிமையாக சென்றடைய வழிவகுக்கும். 

ஆனால் போர் நிறுத்தத் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேறிய நிலையில் அதன்பின்பும் கிழக்கு ‘கூட்டா’வில் ரஷிய ஆதரவுப் படையுடன் சிரியா ஆதரவுப் படைகள் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இப்போது போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதிலும், அது எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது    இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரியவில்லை



தங்களுடைய சொந்த மண்ணில் வாழமுடியாமலும், அகதிகளாக வெளியேற முடியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சிரியாவில் இருந்து படகுகளின் மூலம் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முற்பட்டு கடலில் மாண்ட மனித உயிர்கள் பல. சிரியா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களில் ஏராளமானோர் அப்பாவி பொதுமக்கள். இந்தச் சிரிய யுத்தத்தில் ஒன்றுமே அறியாத ஒரு தலைமுறையே கொல்லப்பட்டுள்ளது.








{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger