Latest Movie :
Home » » ஒரு தலைமுறையை அழித்துவிட்ட சிரியா யுத்தம்!

ஒரு தலைமுறையை அழித்துவிட்ட சிரியா யுத்தம்!

{[['']]}


சிரியா வரலாற்றில் அழியாச் சுவடுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு நிற்கிறது. மனித குலம் பார்த்திராதக் கொடூரங்கள் அங்கு அரங்கேறி வருகின்றன. கொத்துக் கொத்தாக கொல்லப்படும் உயிர்கள். உலகின் அழகிய நகரங்களைக் கொண்ட சிரியா, மெள்ள நரகமாக மாறி வருகிறது. பாதுகாக்க வேண்டிய அரசே பொது மக்களை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது.

அங்கே மனிதநேயம் முற்றிலும் மரணித்து போயிருக்கிறது. என்னதான் நடக்கிறது சிரியாவில்? இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது? இவையெல்லாம் நமக்கு தெரிய வேண்டுமென்றால் அதன் வரலாற்றை அறிய வேண்டும்.

மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, எகிப்துக்கும் பரவியது. 

இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டார்கள்.ஆனால் லிபியாவில் சர்வாதிகாரியான கடாஃபி, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கொல்லப்பட்டார். அதன் பிறகு அரபு எழுச்சி மற்ற நாடுகளுக்கும் பரவியது. அதில் ஒன்றுதான் இந்தச் சிரியா.


அங்கு பதவியில் இருந்த பஷார் அல் அசாத்திற்கு எதிராக புரட்சி தொடங்கியது. மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு இன்னொரு காரணம் மதப் பிரிவினை.

சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிரிவுகள் இருந்தன. ஆனால் பெரும்பான்மை சன்னிக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிகளே ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 



தற்போதைய அதிபர் ஆசாத்தும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.வேலைவாய்ப்புகளில் அலாவி பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுத் தொடர்ந்தது. இதையடுத்து, பெரும்பான்மை சன்னி பிரிவினர் தொடங்கிய புரட்சி, பின்னர் ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது.

லிபியாவில் கடாஃபிக்கு ஏற்பட்ட நிலையை உணர்ந்த சீனாவும் ரஷ்யாவும் தங்களது வர்த்தகக் கூட்டாளியான பஷார் அல் ஆசாத்தை ஆதரித்தனர்.இந்த நேரத்தில் ஈராக்கில் இருந்து வந்த ஐ.எஸ். அமைப்பு, தனி நாடு கோரும் குர்துக்கள், ஆசாத்தைப் பிடிக்காத சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான் என பல தரப்பும் சிரியாவுக்குள் நுழைந்தன.

நான்கு முனை தாக்குதலாக நடக்கும் யுத்தத்தில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா, ஹிஸ்புல்லா இயக்கம், ஈரான் போன்றவை களம் இறங்கின. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி சண்டையிடுகிறது. அமெரிக்காவோ, குர்துக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் நிற்கிறது. இவர்கள் அனைவரையும் ஒழித்துவிடத் துடிக்கிறது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்.



உச்சத்தைத் தொட்ட சிரியா யுத்தம்

2011ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா யுத்தம், 2016-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டது. பழம்பெருமை கொண்ட நகரமான அலெப்போ 2016-ஆம் ஆண்டு மிகப்பெரிய போர்க்களமாக மாறியிருக்கிறது. 

2012-ஆம் ஆண்டில் சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இந்த நகரைக் கைப்பற்றியபோது, சுமார் 21 லட்சம் பேர் இந்த நகரில் வாழ்ந்தார்கள். நான்கு ஆண்டுகளில் இந்த நகரம் சின்னா பின்னமாகியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் இந்த நகரின் மக்கள்தொகை வெறும் மூன்று லட்சமாகக் குறைந்தது.

ரஷ்யப் படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை விட்டு விரட்டப்பட்டனர்.  இரு முக்கியப் பகுதிகளை சிரிய ராணுவம் கைப்பற்றியது. ஜூலை மாதத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், கிழக்கு அலெப்போ நகரில் சிக்கியிருந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் கொண்டு செல்லப் பயன்பட்ட சாலையை சிரிய ராணுவம் அடைத்தது. 


இதைத் தொடர்ந்து தாக்குதல் தீவிரமடைந்தது. ரஷ்ய விமானங்களும், சிரியாவின் ராணுவமும் வீசிய குண்டுகள் ஏராளமான கிளர்ச்சியாளர்களுடன் சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என யாரையும் இந்த யுத்தம் விட்டுவைக்கவில்லை.

கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும் பொதுமக்கள் வதைக்கப்பட்டனர். சித்திரவதை செய்வதற்கும் தனிமையில் அடைத்து வைப்பதற்கும் பல சிறைகளை கிளர்ச்சியாளர்கள் அமைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம்

அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்நகரில் வசித்து வந்த பலர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 5 வயது சிறுவன் ஒம்ரான் படுகாயமடைந்து முகத்தில் ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் படம் உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது.


இதனிடையே சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்த ஒப்புதல் காரணமாக, சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களும், உணவுப் பொருட்களும் எளிமையாக சென்றடைய வழிவகுக்கும். 

ஆனால் போர் நிறுத்தத் தீர்மானம் ஐ.நாவில் நிறைவேறிய நிலையில் அதன்பின்பும் கிழக்கு ‘கூட்டா’வில் ரஷிய ஆதரவுப் படையுடன் சிரியா ஆதரவுப் படைகள் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இப்போது போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதிலும், அது எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது    இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரியவில்லை



தங்களுடைய சொந்த மண்ணில் வாழமுடியாமலும், அகதிகளாக வெளியேற முடியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சிரியாவில் இருந்து படகுகளின் மூலம் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்ல முற்பட்டு கடலில் மாண்ட மனித உயிர்கள் பல. சிரியா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களில் ஏராளமானோர் அப்பாவி பொதுமக்கள். இந்தச் சிரிய யுத்தத்தில் ஒன்றுமே அறியாத ஒரு தலைமுறையே கொல்லப்பட்டுள்ளது.








Share this article :

Post a Comment

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger