{[['']]}
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்களுக்கு வந்த திருமணப் பரிசுகளை ஆசையாகப் பிரித்து கொண்டிருந்த போது ஒரு பார்சலில் வந்த வெடிகுண்டு வெடித்து மணமகன், மணமகன் பாட்டி ஆகியோர் உயிரைப் பலிவாங்கிய சம்பவ அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் மணமகள் பயங்கரக் காயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
இம்மாதம் பிப்ரவரி 18-ம் தேதி ஒடிசாவின் பட்நாகரைச் சேர்ந்த சவுமியா சேகர் சாஹுவுக்கும் பவுத் மாவட்டத்தைச் சேர்ந்த ரீமா சாஹுவுக்கும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமண வைபவம் நடந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று மணமக்களுக்கு ராய்ப்பூரிலிருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது, அதாவது பார்சலில் திருமணப் பரிசு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பார்சலைக் கொண்டு வந்து அளித்த நபர் முன்பின் பழக்கமில்லாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பார்சலை எடுத்துக் கொண்டு சவ்மியா சேகர் தன் பாட்டியின் அறைக்குச் சென்று பிரித்துள்ளார். அப்போது பெரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது.
பெரிய வெடிச்சத்தம் ஏற்பட அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பீதியடைந்து வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வந்து காயமடைந்த மணமகன், மணமகள், பாட்டி ஆகியோரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.
இதன் பிறகு சிகிச்சை பயனளிக்காமல் பாட்டி உயிரிழந்தார். மணமகன் சவ்மியா சேகரை புர்லா மருத்துவமனைக்கு மாற்றும் போது பரிதாபமாக உயிர் பிரிந்தது. ரீமா சாஹு உயிருக்குப் போராடி வருகிறார்.
பட்னாகர் எஸ்டிபிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment