Latest Movie :
Home » » சிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்

சிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்

{[['']]}
2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு,  மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி...........



இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்பட்டன. இவற்றில் சுதந்திர சிரியப்படை ஐக்கிய அமெரிக்காவை சார்ந்த ஓர் அமைப்பாகும். ஜபத் அல் நஷ்ரா  அல் கெய்தாவைச் சார்ந்த ஓரு அமைப்பாகும். 

தீர்க்க முயலாத ஐநாவும் தீர்க்க முடியாத மனித உரிமைக் கழகமும்

ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போர் நடக்கும் போது ஏற்பட்ட அப்பாவிகளின் அவலத்திலும் அதிக அவலம் இப்போது சிரியாவில் நிலவுகின்றது. சிரியப் பிரச்சனை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைக்கழகத்தில் 2018 பெப்ரவரி இறுதியில் விவாதிக்கப்பட்டது. கையாலாகாத அமைப்பாகிய மனித உரிமைக்கழகம் ஐநா பாதுகாப்புச் சபையால் கூட கொண்டுவர முடியாத அமைதியை சிரியாவில் கொண்டு வர முடியுமா? 

சிரியா தொடர்பாக ஐநா ஒரு சிறப்பு சமாதானத் தூதுவராக முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனனை நியமித்ததூதுவராக நியமித்தது. அவர் சிரியாவில் பட்டபாடு பெரும் பாடு. கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டினார்கள். 

கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். 

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்றது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்றது. 

இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்றது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்றது. ஆனால் கோஃபி தனது கோரிக்கைகளுக்கு ஐநா பாதுகாப்புச் சபை செவிசாய்க்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். 

அரபு வசந்தத்தை இலையுதிர் காலமாக்கிய ஐஎஸ்

2014-ம் ஆண்டு சிரியாவிலும் ஈராக்கிலும் அதிரடியாகக் களமிறங்கியது ஐஎஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பு. 2014-ம் ஆண்டு அது சிரியாவிலும் ஈராக்கிலும் 34,000 சதுர மைல்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. ஆயிரக்கணக்கானவர்களை அடிமைகளாகவும் வைத்திருந்தது. 

அப்பாவி யதீஷியர்களுக்கு எதிராக இனக்கொலை புரிந்து சிறுமிகள் உட்பட பல பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியது. இருபத்தியொன்றிற்கும் மேற்பட்ட நாடுகளில் அது தாக்குதல்களை நடத்தியது. சிரியாவில் மக்களாட்சி வேண்டிச் செய்யப்பட்ட எழுச்சி திசைமாறி ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போராக மாறியது. ஈரான், சவுதி அரேபியா, துருக்கி போன்ற பிராந்திய வல்லரசுகளும் அமெரிக்கா, இரசியா ஆகிய உலக வல்லரசுகளும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராகத் தக்குதல் நடத்தின.

அமைப்புகளிடை மோதல் நாடுகளிடை மோதலாகியது

இதுவரை ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அமைப்பிற்கும் மற்ற மதவாதப் படைக்குழுக்களுக்கும் எதிரான போர் நடந்த சிரியாவில் ஈரானும் இஸ்ரேலும் ஒரு புறம், அமெரிக்காவும் இரசியாவும் ஒரு புறம், துருக்கியியும் குர்திஷ்களும் இன்னொரு புறம் என மோதலகள் உருவாகியுள்ளன. தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிரான போர் நடந்த சிரியா இப்போது பிராந்திய வல்லரசுகளுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான மோதல் களமாக மாறும் ஆபத்து உருவாகியுள்ளது.

பழம் பெரும் எதிரிகளான இஸ்ரேலும் ஈரானும்

1. 2018 பெப்ரவரி மாதம் 10-ம் திகதி இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சிரியாவிற்குச் சொந்தமான கோலான் குன்றுகளுக்குள் ஈரானின் ஆளில்லா விமானங்கள் பறந்தன. அதை இஸ்ரேலிய உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தின.

2. ஈரான் ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்ட சிரியாவின் பல்மேரியா பிராந்தியத்தில் உள்ள ரியாஸ் வான்படைத்தளத்தின் மீது எட்டு இஸ்ரேலிய F-16 போர்விமானங்கள் தாக்குதல் நடத்தி அதை அழித்தன. பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. 

3. தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிச் செல்லும்போது இஸ்ரேலிய F-16கள் மீது சிரியப்படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு F-16 சுட்டு வீழ்த்தப்பட்டது. அது இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் விழுந்தது. விமானிகள் இருவர் உயிர் தப்பினர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹிஸ்புல்லா இனிப்பு வழங்கி அதைக் கொண்டாடியது.

4. வல்லூறு என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படும் ஒற்றை இயந்திரம் கொண்ட F-16 போர்விமானம்  ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடிய தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு பழிவாங்க சிரியாவில் உள்ள மூன்று வான்பாதுகாப்பு நிலைகள் உட்பட பன்னிரண்டு இலக்குகள் மீது இஸ்ரேலிய வான்படையினர் தாக்குதல் நடத்தினர். சிரியாவிலுள்ள எட்டு சிரிய நிலைகள் மீதும் நான்கு ஈரானிய நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்த துரிதத்தைப் பார்க்கும்போது இதை இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தது என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். 

இஸ்ரேல் மேலும் பல் தாக்குதல்கள் செய்ய முனைந்த போது இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுடன் தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்தும் படி விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. புட்டீன் மிகவும் ஆத்திரமடைந்திருந்தார் எனவும் செய்திகள் தெரிவித்தன. சிரியாவில் ஈரானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் இஸ்ரேலியப் படைத்தளபதிகளின் திட்டம் கைவிடப்பட்டது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும்

மேற்காசியாவின் இரு மோசமான எதிரிகளான ஈரானும் சிரியாவும் பல ஆண்டுகளுக்கும் பின்னர் நேரடியாக மோதிக் கொண்டன.

சிரியாவில் ஈரானியப் படைகளின் இருப்பை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக எதிர்க்கின்றன. சிரியாவில் ஈரான் உறுதியாக நிலை கொண்டால் அது லெபனானையும் இலகுவில் ஹிஸ்புல்லா அமைப்பின் உதவியுடன் கைப்பற்றலாம். அது இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகும். 

மத்திய தரைக்கடலில் ஈரானின் ஆதிக்க நிலப்பரப்பு நீண்டு செல்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்காவும் சிரியாவிலிருந்து ஈரானை வெளியேற்ற முயல்கின்றது.  ஈரானியப் படைகளும் ஹிஸ்புல்லா போராளிகளும் சிரியாவில் பரவலாக நிலைகொண்டுள்ளன. தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றை வெளியேற்ற உறுதி பூண்டுள்ளன. 

அவை இரண்டும் இணைந்து செயற்படுவது போல வெளியில் காட்டிக் கொள்ளவதில்லை. சிரியாவில் ஹிஸ்புல்லா தலையிடத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் பல தடவை அங்கு விமானத் தாக்குதல் நடத்தியது. அவை இரகசியமாக நடத்தப்பட்டடன. கோலான் குன்றுகள் தனது ஆக்கிரமிப்பிற்கு கீழ் இருப்பதை எல்லா வகையில் பாதுகாக்க இஸ்ரேல் முயலும். இந்த மோதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலிய உயர் மட்டக்குழு அமெரிக்கா சென்று மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டின.

மியூநிச் மாநாட்டில் எதிரொலித்த சிரியா

ஜெர்மனியில் நடந்த மியூநிச் பாதுகாப்பு மாநாட்டில் இஸ்ரேலியத் தலைம அமைச்சர் இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் ஈரானிய ஆளில்லாவிமானத்தின் பாகத்தை உயர்த்திப் பிடித்துக் காட்டிக் கொண்டு ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவட் ஜரீஃப் அவர்களின் பெயரைச் சொல்லி இது உங்களுடையது. மேலும் அவர் உங்கள் கொடுங்கோலர்களுக்குச் சொல்லுங்கள் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை சோதித்துப் பார்க்க வேண்டாம் என்றார். 

பின்னர் அங்கு பதிலளித்த ஈரானிய அமைச்சர் நெத்தன்யாஹூ செய்தது கோமாளித்தனமானது என்றார். ஆனால் ஈரானின் முன்னாள் படைத்தளபதி ஈரானில் கருத்துத் தெரிவிக்கையில் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவீவ் தரைமட்டமாகும் இஸ்ரேல் அழிக்கப்படும், பெஞ்சமின் நெத்தன்யாஹூ கொல்லப்படுவார் எனச் சூளுரைத்தார். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் துல்லியமாகத் தாக்குதல் செய்யக்கூடிய ஏவுகணைகளை வழங்க முயல்கின்றது என்றார் நெத்தன்யாஹூ.

சிரியாவும் துருக்கியும் மோதல்

சிரியாவின் வட பிராந்தியத்தில் ஐஎஸ் படையினரை விரட்டிய குர்திஷ் போராளிகள் அதைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். சிரியாவிலோ ஈராக்கிலோ குர்திஷ் போராளிகள் தமக்கு என ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைதிருப்பதை விரும்பாத துருக்கி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அஃப்ரின் நகரை ஆக்கிரமித்தது. அங்கு குர்திஷ் போராளிகளுக்கும் துருக்கியப் படைகளுக்கும் இடையில் மோதல் உருவானது. 

தனது நாட்டுக்குள் துருக்கியப் படைகள் வந்தது தனது இறையாண்மைக்கு இழுக்கு என்பதால் சிரிய அரச படைகள் அஃப்ரின் நகருக்குள் சென்று துருக்கியப் படைகளுடன் சண்டையிடுகின்றன. சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விருப்பம் கொண்டுள்ள துருக்கி சிரியாவுடன் ஒரு போருக்குத் தயார் என அறிவித்துள்ளது. துருக்கி அஃப்ரினில் செய்த படை நடவடிக்கையில் தனது படையில் 30 உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. உண்மையான எண்ணிக்கை அதிலும் அதிகமாகும். 

1974-ம் ஆண்டு துருக்கி சைப்பிரசில் 60,000 படையினரை இறக்கி ஒரு மாதம் சண்டையிட்டு 570 படையினரின் இழப்புக்களுடன் தனது நோக்கத்தை நிறைவேற்றியிருந்தது. அஃப்ரின் நகருக்குள் 6400 படையினரை இறக்கியதாக துருக்கி அறிவித்த போதிலும் உண்மையான எண்ணிக்கை பதினையாயிரம் முதல் இருபதினாயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அஃப்ரினில் துருக்கியின் எண்ணம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி. அஃப்ரினில் துருக்கிக்கு எதிரான போரில் குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா உதவ மாட்டேன் எனக் கைவிரித்து விட்டது.

அமெரிக்க துருக்கி முறுகல்

சிரியப் பிரச்சனையால் துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்துள்ளது. 2018 பெப்ரவரி நடுப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கடிப் புள்ளியில் இருக்கின்றது என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன்.

இதற்கான காரணம் குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா படைக்கலன்களையும் பயிற்ச்சிகளையும் வழங்குவதே. இதைச் சீர் செய்ய பெப்ரவரி மூன்றாம் வாரம் ரில்லர்சனுடன் அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச் ஆர் மக்மஸ்ரர் ஆகியோர் துருக்கி சென்று ஆழமான கலந்துரையாடல் செய்துள்ளனர்.

இரசியர்களைக் கொன்ற அமெரிக்கா

2018 பெப்ரவரி 7-ம் திகதி சிரிய அரச படையினரும் இரசியாவின் தனியார் படையினரும் இணைந்து அமெரிக்க ஆதரவு படைக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல் ரபியா நகர்மீது தாக்குதல் நடத்தினர். அமெரிக்கப்படையினரும் அவரது ஆதரவுப் படையினரும் நடத்திய பதில் தாக்குதலில் பல இரசியர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரசியர்கள் பலர் கொல்லப்பட்ட தாக்குதல் இதுவாகும். இரசிய அரசு பல தனியார் படைகளை சிரியாவில் களமிறக்கியுள்ளது. 

தனது படையினருக்கு ஏற்படும் உயிரிழப்பை இரசியா பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காகவே தனியார் படைகள். தனியார் படை என்பது கூலிப்படைக்கான கௌரவப் பெயராகும். இரசிய தனியார் படையினர் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் செய்தது இரசிய அரசின் உத்தரவிலா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இரசியப் படையினர் அமெரிக்க ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா எப்படி நடந்து கொள்ளும் என அறியவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புட்டீனின் நெருங்கிய நண்பரான Yevgeny Prigozhin என்பவரே இரசியாவில் தனியார் படைக்குப் பொறுப்பாகவுள்ளார். அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டமைக்காக Yevgeny Prigozhin எதிராக அண்மையில் குற்றப்பத்திரிகையும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. தனது இழப்புக்களுக்குப் பழிவாங்கும் முகமாக இரசியா இனின் என்ன நடவடிக்கை எடுக்க்ப் போகின்றது என்பதும் அதன் விளைவுகளும் சிரியாவில் பெரும் மோதலை உருஆக்கலாம்.

ஐஎஸ் அமைப்பு முற்றாக ஒழிக்கப்படவில்லை
ஐஎஸ் அமைப்பு சிரியாவில் இருந்து இன்னும் முற்றாக ஒழிக்கபப்டவில்லை. ஆங்காங்கே பல சிறிய நிலப்பரப்புக்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கின்றார்கள். மெய்நிகர் நாணயத்தின் (Crypto-currency or simply bitcoins) புழக்க அதிகரிப்பு அவர்களின் நிதி திரட்டலை இப்போது அதிகரித்துள்ளது. அவர்கள் சிரியாவில் மீளவும் எழுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது.

இரசியாவின் ஆதரவு இருக்கும் வரை அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை அசைப்பது மிகவும் கடினம் என்ற நிலை 2016-ம் ஆண்டே உருவாகிவிட்டது. ஆனால் 75 விழுக்காட்டிலும் அதிகமான சனி இஸ்லாமியர்களைக் கொண்ட சிரியாவில் சியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான அல்வைற் இனக்குழுமத்தைச் சேர்ந்த பஷார் அல் அசாத்தால் அமைதியான ஆட்சியை நடத்த முடியாது. சிரிய இரத்தக் களரிக்கு அண்மையில் முடிவு இல்லை.
Share this article :

Post a Comment

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger