Latest Movie :
Home » » மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு , அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற்சந்திப்பு , அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

{[['']]}


தமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் அரசாங்கத்தின் சிறிலங்காவுக்கு பொறுப்பான உயரதிகாரியுடன் யேர்மன் இளையோர் அமைப்பு பிரதிநிதியும் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதியும் முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்.

இச் சந்திப்பில் தாயகத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பை பற்றியும் , சிறிலங்கா அரசு கொண்டுவரவிருக்கும் புதிய அரசிலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை பற்றியும் நீண்ட உரையாடல் அமைந்தன.

இலங்கை அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில்,

தமிழின அழிப்புக்கு சிறீலங்காவின் அரசியலமைப்புகள் சட்டரீதியில் வழிகோலியமையால் அதனை வரலாற்று ரீதியாக நிராகரித்து வந்த ஈழத்தமிழர்கள் , புதிய அரசியலமைப்பும் செயற்பாடுகளும் அந்த மூல நோக்கத்திலிருந்து வேறுபடாமையால் இந்த அரசியலமைப்பையும் எவ்வித நம்பிக்கையுமின்றி நிராகரிக்கின்ற கருத்துக்களையே தாயகத்திலும் புலத்திலும் வெளியிடுகின்றனர் எனவும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நீர்மூலமாக்கும் நோக்கத்தையே புதிய அரசிலமைப்பு கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் யேர்மன் அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு தொடர்பான தமது கருத்தை மேலும் பகிர்ந்துகொண்டதோடு, எதிர்வரும் சில மாதங்களில் சிறிலங்கா அரசு மிகவும் சில நெருக்கமான புறச்சூழலில் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய நகர்வுகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதி தமிழர் தாயகத்தில் நிலவும் ராணுவமயமாக்கல் தொடர்பாக, “அடையாளம்” அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணத்தை மேற்கோள்காட்டி தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக யேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான கல்விசார் நிகழ்வுகளில் சிங்கள ராணுவத் தளபதிகளிடமும் , அதிகாரிகளிடமும் தமிழ் மாணவர்கள் தலைகுனிந்து நிற்கும் காட்சிகள் வேதனைக்குரியது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இதுவரை எவ்வித பொறுப்புக்கூறலுக்கும் உடன்படாத நிலையில் இச் செயலின் ஊடாக தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரச ராணுவம், நல்லவர்களாகவும் , தமிழ் மக்களை காப்பாற்றுபவர்களாகவும் காட்சி அளிப்பதும், அதற்கு யேர்மன் அரசாங்கம் ஏதோ ஒருவகையில் வாய்ப்பை வழங்குவதும் பரிகார நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கைக் கதவை மூடுவதாக அமைகின்றது என்பதாக தொடர்ந்து கூறினார்.

நடைபெற்ற சந்திப்பின் நிறைவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக சமகால அரசியல் கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணங்கள் யேர்மன் அரசின் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிக்கு கையளிக்கப்பட்டது.கடந்த காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இவ்வாறான சந்திப்புகள் எதிர்வரும் காலங்களிலும் தொடரவேண்டும் எனும் வேண்டுகோளை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
Share this article :

Post a Comment

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger