{[['']]}
புதிய வனங்களை வளர்ப்பதில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று அறிக்கை அளித்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம். செயற்கைக் கோள்கள் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, இந்திய நிலப்பரப்பில் 24.4% அளவுக்கு வனப் பகுதிகளாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, வனப்பரப்பும் மரங்கள் வளர்ப்பும் முந்தைய ஆண்டுகளைவிட 1% அதிகரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். அதேசமயம், புதிய வனங்களை வளர்ப்பதில் காட்டும் முனைப்பு, வனங்களை அழிப்பதைத் தடுப்பதிலும் அரசுக்கு இருக்க வேண்டும்.
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33% வனங்களாக இருக்க வேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அதற்கேற்ப வன வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும், புதிதாக மரங்களை நட்டு வனப் பகுதியை அதிகரிப்பது, ஏற்கெனவே இருந்த பல்லுயிர்ப் பெருக்க இயற்கை வனங்களுக்கு ஈடாக முடியாது. அதே பரப்பளவுக்குப் புதிய மரங்களை நட்டு வனங்களை வளர்த்தாலும், பழைய வனங்கள் அளித்த நன்மைகள் கிடைத்துவிடாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கப்பல்களைக் கட்டவும் இதர பயன்பாட்டுக் காக வும் இந்திய வனங்களில் வளர்ந்த நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பெரிய - அரிய மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினர். அப்படி வெட்டப்பட்ட இடங்களில் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வும் பிற வணிகப் பயன்பாட்டுக்காகவும் புதிய மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் வளர்ந்தாலும் வனத்தின் பழைய வலிமையும் இயற்கைச் சமநிலையும் குறைந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காடுகள் வரம்பின்றி அழிக்கப்பட்டன. இதனாலும் நாட்டின் இயல்பான தட்ப - வெப்ப நிலை, மழைப் பொழிவு ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1,200 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பழைய காடுகள் அழிக்கப்பட்டிருப்பது மர - வனத் தணிக்கையின்போது தெரிந்துள்ளது. வட கிழக்கு மாநிலப்பகுதி என்பது மலையும் வனங்களும் நிரம்பிய, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உறைவிடமான பகுதி. அங்கு ஏற்பட்டுள்ள வன இழப்பானது வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஒடிஷா, அசாம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வனப்பகுதியை அதிகப்படுத்தியிருந்தாலும் வட கிழக்கில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்ய முடியாது.
வனங்களை வளர்ப்பதில் இந்தியா புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரே வகை மரக் கன்றுகளையே எல்லா இடங்களிலும் நடக் கூடாது. பாரம்பரியமாக வனங்கள் இருந்த பகுதியில் விளைந்த மரங்களையும் தாவரங்களையும் மீண்டும் நட்டுப் பராமரிக்க வேண்டும். 3 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள திறந்தவெளிக் காடுகளில் 10% முதல் 40% வரையிலான இடத்தில்தான் மரங்கள் உள்ளன என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மிகுந்த கவலை தரும் விஷயம் இது. வனப் பகுதிகளில் திறந்தவெளி கனிமச் சுரங்கங்களுக்கு அரசு அனுமதி தரவே கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் வன வளர்ப்பில் உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். அப்போதுதான் வரும் தலைமுறைக்கு வளமான சுற்றுச்சூழலை நாம் விட்டுச்செல்ல முடியும்!
Post a Comment