{[['']]}
சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (28-02-2018) விடுத்துள்ள அறிக்கை: ‘’சிரியா நாட்டில் அரசப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மூண்டுள்ளப்போரில் அந்நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருப்பது பெருத்த மனவேதனையும், அளவற்றத் துயரத்தையும் தருகிறது.
அங்குள்ள கிழக்கு கோட்டா பகுதியில் சிரியா அரசப்படைகள் நடத்துகிற விமானத் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டு கொண்டிருக்கிற படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து ஒட்டுமொத்தத் தமிழர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கின்றது.
சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் யாவும் ஈழத்தில் எமது இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட கோர இனப்படுகொலையை நினைவூட்டி மீண்டும் அக்கொடுமையான காலக்கட்டத்திற்கு இட்டுச்செல்கின்றது. மரண ஓலத்தோடு கண்ணீரும் கம்பலையுமாக அலறித் துடிக்கிற அம்மக்களின் படங்கள் யாவும் எங்களது மனசாட்சியை உலுக்கி எடுக்கின்றன; ஈழத்தாயகத்தில் மீது போர் நிகழ்த்தப்பட்டது போல எங்களை அறியாமலே எங்களது கண்களில் நீர் பெருக்கெடுத்து, சிரிய மக்களுக்காக தமிழர்கள் எங்களது மரபணுக்கள் துடிக்கிறது.
சிரியா மக்கள் எமது மொழியையும், எமது இனத்தையும் சாராதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எம்மைப் போல எலும்பும், நரம்பும், ஊனும், உடலும், பசியும், உறக்கமும்,கனவும் கொண்ட சக மனிதர்கள். ஆகவே, அந்த மாந்தநேயப் பற்றாலேயே நாங்கள் அம்மக்களுக்காகக் குரலெழுப்புகிறோம்.
அலெப்போ நகரில் நடத்தப்பட்டத் தாக்குதலில் படுகாயமுற்ற 5 வயது சிறுவன் ஒம்ரான் இரத்தம் தோய்ந்த உடலோடு அவசர ஊர்தியில் அமர்ந்திருக்கிற படமானது எங்களது பிள்ளை பாலச்சந்திரனை நினைவூட்டுகிறது. இந்நூற்றாண்டில் ஒரு பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு உறவுகளைப் பறிகொடுத்து உலகெங்கும் அகதியாக ஓடித்திரிகிற இனத்தின் மக்களான தமிழர்கள் எங்களுக்குத்தான் இனப்படுகொலை ஏற்படுத்தும் வலியும், வேதனையும், காயமும், ரணமும், தெரியும். தமிழர்கள் நாங்கள் அக்கொடுமையினை எங்கள் வாழ்வில் அனுபவித்தோம்.
எங்கள் உறவுகள் துள்ளத்துடிக்க ஈழ நிலத்தில் கொல்லப்படும்போது அதனைத் தடுத்து நிறுத்த வலிமையற்ற அனாதைகளாய், உடன்பிறந்தவர்களின் உயிர்களைப் பறிகொடுத்த நடைபிணங்களாய் நாங்கள் நிர்கதியற்று நின்றோம். அதன்மூலம் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியும், பெரும் காயமும், ஆறாத ரணமும் இன்றைக்கு எங்கள் உள்ளங்களில் வன்மமும், வெறியுமாக உரமேறிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு இழைக்கப்பட்ட அக்கொடுமையும், அநீதியும் இன்னொரு இன மக்களுக்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் மன்றாடுகிறோம்; எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டு கண்ணீர் வடிக்கிறோம்.
உலகத்தீரே! அங்கு கொலைசெய்யப்படுகிற பிஞ்சுக் குழந்தைகளின் முகங்கள் உங்கள் பிள்ளைகளின் முகங்களை நினைவூட்டவில்லையா? அங்கு கதறும் தாய்மார்களின் முகங்கள் உங்களது தாயை ஒத்திருக்க வில்லையா? அங்கு எழும் மரண ஓலமும், கதறல் சத்தமும், மனித உயிரின் வலியும் உங்களது தூக்கத்தைத் தொலைக்கவில்லையா? அந்த மக்களின் இரத்த வாடை உங்கள் நாசிகளில் ஏறவில்லையா?
எங்களைக் காப்பதற்கு யாருமே இல்லையா என்பது போல இருகரம் நீட்டி நம்மிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் அம்மக்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறைகளைக் கிழிக்கவில்லையா? தாங்கள் எந்த நாட்டில் பிறந்திருக்கிறோம் என்றுகூட தெரிந்திராத பிஞ்சுக்குழந்தைகள்கூட கரிக்கட்டையாக்கப்பட்டு கொல்லப்படுவதை கண்டும் காணாதது போல எவ்வாறு நம்மால் கடந்துபோக முடிகிறது?
இறை நம்பிக்கை கொண்டு, மானுடப்பற்றைப் போதித்து, அன்பு, இரக்கம், பரிவு, கருணை எனப் பேசியதெல்லாம் சக மனிதன் சாகிறபோது வேடிக்கைப் பார்ப்பதற்குத்தானா? மனிதநேயத்தைப் போதிக்கவும், மனிதர்களை நல்வழிப்படுத்தி நெறிப்படுத்தவும்தானே மதங்கள் தோன்றின. இன்று அம்மதத்தின் பெயராலேயே மனிதர்களைக் கொல்லுவதை எவ்வாறு ஏற்க முடியும்? மனிதர்களைக் கொன்றுவிட்டு மதத்தினைக் காத்து என்ன செய்யப் போகிறோம் உலகத்தீரே?
எதற்கு இன்னும் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்? இராணுவத் தாக்குதலில் தன் தாய் இறந்துபோனதுகூட தெரியாது அத்தாயின் மார்பினைப் பசியோடு சவைத்துக் கொண்டிருந்த ஒரு பச்சிளங்குழந்தையின் படத்தினை இன்னொரு நிலத்தில் பார்க்கிற மனவலிமை தமிழர்கள் எங்களுக்கில்லை. ஈவிரக்கமற்ற ஓர் இனப்படுகொலை மூலம் இனத்தையும், நிலத்தையும் பறிகொடுத்துவிட்டு நாதியற்று நிற்கிற எங்கள் நிலை உலகில் வேறெந்த இனத்திற்கும் வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் இறைஞ்சுகிறோம்.
ஆகவே, சிரியா அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீதானத் தாக்குதல் எனும் பெயரில் அம்மண்ணின் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ எனும் உயர்நெறியை வாழ்வியல் வழியாகக் கொண்டிருக்கிறத் தமிழர்கள் சிரிய மக்கள் மீதான தாக்குதலைத் தன்னினத்தின் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறார்கள்.
எனவே, இவ்விவகாரத்தில் தமிழர்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், மானுடப்பற்றோடும் சிரிய மக்கள் மீது தொடுக்கப்படும் போரை, அம்மானுடப்படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பாதிக்கப்பட்டு காயம்பட்டு நிற்கிற சிரியா மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் உதவிசெய்து உயிரைக் காக்க வேண்டும் எனவும் ஐ.நா. பெருமன்றத்திடம் வலியுறுத்த மத்திய அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன்.’’
Post a Comment