{[['']]}
வங்கி மோசடி புகார்களால் எளிமையாக தொழில் செய்யும் வாய்ப்பு பறி போய் விடும் என தொழிலதிபர்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறும் தொழில் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
“இந்தியாவில் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதியவர்கள் தொழில் செய்யவும், வர்த்தகர்கள் விரைவாக தொழில் செய்யும் வண்ணம் அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகளை எளிமையாக்கி வருகிறோம். எளிமையாக தொழில் செய்தல் என்பதை இலக்காக வைத்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது.
ஆனால் வங்கிகளில் வர்த்தகர்கள் வைத்துள்ள வராக்கடன் பெரிய சுமையாகி வருகிறது. இதுமட்டுமின்றி வங்கிகளை ஏமாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது. சில வர்த்தகர்களின் இதுபோன்ற செயலால் எளிமையாக தொழில் செய்வதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ எனக்கூறினார்.
நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி மோசடி நடந்ததது சமீபத்தில் தெரிய வந்தது. இதுதொடர்பாக வைரம் மற்றும் தங்க நகை வர்த்தகர் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுபோலவே மற்றொரு வங்கியான ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸில் 389 கோடி ரூபாயை, வைர நிறுவனம் மோசடி செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்தே தொழிலதிபர்களுக்கு அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment