{[['']]}
இந்தியாவில் பணத்தை திருடும் நோக்குடன் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், உலக அளவில் சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் இணையதளங்களில் புகுந்து தாக்குதல் நடத்தி தகவல்களைத் திருடுவதும், பண திருட்டில் ஈடுபடும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. சைபர் தாக்குதல் எனப்படும் இந்த மோசடி சம்பவங்கள் குறித்து ‘அக்கமாய்’ தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவில் 53,000 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. உலக அளவில் இது 40 சதவீதமாகும், உலக அளவில் சைபர் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. குறிப்பாக நிதிசேவை நிறுவனங்களே அதிகம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகின்றன.
வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்ந்த இணையதளங்களில் 2017 அதிகமான அளவு சைபர் தாக்குதல் நடந்துள்ளன. பணத்தை திருடும் நோக்கத்துடன் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. இதன் மூலம் பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கிரிப்டோ பண மாற்று அடிப்படையில் தற்போது அதிகமாக மோசடிகள் நடைபெறுகின்றன. கிரிப்ட்டோ கரன்ஸி ஒதுக்கீடு செய்வதாகக் கூறி போலியான கிரிப்டோ வாலெட்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடப்படுகின்றன.
மோசடி இமெயில்கள் அனுப்புவது, இணையதளங்களில் ஊடுருவுதல், தகவல்களை மாற்றியமைப்பது, இணையதள அமைப்புகளில் போலியானவற்றை உருவாக்குவது, வைரஸை அனுப்பி தாக்குதல் நடத்துவது போன்ற முறைகளில் இந்த தாக்குதல்கள் நடக்கின்றன.
எனவே இணையதள உரிமையாளர்கள் இதனை கவனத்தில் கொண்டு கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. இணையதளங்களை பாதுக்காவும், சைபர் தாக்குதல்களை தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமான ஒன்று’’ என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment