{[['']]}
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை கனேடியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிரி ஆனந்த சங்கரி கனேடிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல் என்பன தொடர்பாக, ஹரி ஆனந்த சங்கரி கனேடிய நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபி றி லண்டின், கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையில் உரையாற்றியதை சுட்டிக்காட்டிய ஹரி ஆனந்த சங்கரி, பொறுக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்குப் பயணம் செய்தபோது, தமிழ்த் தாய்மார் பலரைச் சந்தித்து உரையாடியதாக கூறிய அவர், அந்த தய்மாரின் பிள்ளைகள், போரின் இறுதி வாரங்களில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார்.
சரணடைந்த தமது பிள்ளைகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த தாய்மாரும், ஏனைய குடும்ப உறுப்பினர்களும் தங்களது கேள்விகளுக்கான பதில்களையும், நடந்த உண்மைகளையும் அறிவதற்குமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹரி ஆனந்த சங்கரி கூட்டிக்காட்டினார்.
வடக்கிலும் கிழக்கிலும் பிரதான வீதியோரங்களில் தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கடந்த ஒரு வருட காலத்திற்கும் அதிகமாக கடும் வெய்யில், மற்றும் புழுதி என்பவற்றின் மத்தியில் அவர்கள் போராடுகிறார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்தத் தாய்மார் முன்வைத்த கோரிக்கை போன்ற மிகச் சிறிய கோரிக்கைகளுக்குக் கூட, இலங்கை அரசாங்கம் இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
உண்மையையும், நீதியையும் வேண்டி நிற்கும் இந்த மக்களின் கோரிக்கைகளை கனேடியர்களான நாம் புரிந்து கொள்கிறோம். இலங்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் வேண்டி நிற்போருக்கும், எமக்கு உந்துசக்தியாக விளங்கி, உத்வேகம் அளிக்கும் வீரமிக்க தாய்மாருக்கும் நாம் ஆதரவாக இருப்போம் என்றும் ஹரி ஆனந்த சங்கரி எடுத்துக் கூறினார்.
Post a Comment