{[['']]}
சிங்கள மக்களையும், அவர்களின் குரல்களுக்கும் காது கொடுக்காது எவர் நடந்து கொண்டாலும் அவர்களுக்கு ஏற்படும் நிலை என்ன என்பதை இன்று உணர முடியும் என புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவரும், மகிந்த ராஜபக்ச ஆதரவாளருமான உதயகம்பன்பில எச்சரித்துள்ளார்.
அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்தினை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சிங்கள மக்களின் அரசியல் பயணத்தில் இன்றைய அரசியல் வெற்றி முக்கியமானதாக மாறியிருக்கிறது.
உலகத்திற்கு இன்று சிங்களமக்கள் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார்கள். எமது சிங்கள மக்கள் முதன்முறையாக கட்சி மற்றும் நிற பேதங்களைப் பார்க்காமல் இனத்தைக் காப்பாற்றியுள்ளார்கள். எமது இனத்தைக் காப்பாற்றுவதற்காக தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இனிமேல் எவர் ஆட்சிக்கு வந்தாலும், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நடந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச சார்புடைய அரசியல் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றன.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அது மாத்திரமன்றி ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகளவில் இருப்பதனால் இந்தப் பிரச்சினை எழுந்திருப்பதனால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது கொழும்பு அரசியலில்.
மகிந்த ராஜபக்ச அலை மீண்டும் கொழும்பில் மையம் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தலையிடியைக் கொடுக்கும் நிகழ்வாக தற்போதைய அரசியல் களம் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment